கோலாலம்பூர், நவம்பர்-28 – மலேசியா இனப்படுகொலைகளைக் கடுமையாக எதிர்க்கிறது.
அந்த நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லையென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களால் Genocide Convention எனப்படும் 1948-ஆம் ஆண்டு இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடவில்லை.
அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் உருவாகக் காரணமான ரோம் பிரகடனம் மற்றும் எல்லா வகை இனப்பாகுபாடுகளையும் ஒழிக்கும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தமான Icerd ஆகிய இரண்டும், மலேசியாவுக்கு அதில் தடைக்கற்களாக இருப்பதாக பிரதமர் தெளிவுப்படுத்தினார்.
ரோம் பிரகடனமும், Icerd ஒப்பந்தமும் பூமிபுத்ராக்களின் உரிமை மற்றும் LGBTQ அம்சங்களைத் தொடுகின்றன; அவற்றை பெரும்பாலான மலேசியர்களால் ஏற்றுக் கொள்ள இயலாது.
தவிர, மலாய் ஆட்சியாளர்கள் மன்றமும் அது குறித்து கவலைத் தெரிவித்திருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
பாலஸ்தீனத்துக்கு எதிரான தாக்குதல்களால் இஸ்ரேல் மீது மலேசியா நடவடிக்கை எடுக்க ஏதுவாக, இனப்படுகொலையைத் தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சாத்தியம் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
எனினும், ரோம் பிரகடனம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கலாமென பிரதமர் சொன்னார்.
எதிர்கட்சிகளின் கடும் ஆட்சேபம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடுவதிலிருந்து 2019-ஆம் ஆண்டு மலேசியா விலகிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.