
யொங் பெங், செப்டம்பர்-23,
ஜோகூர், யொங் பெங் அருகே உள்ள பெக்கோக் ஆற்றில், ஒரு டன் எடையில் பல்வேறு இனத்திலான உப்பு நீர் மீன்கள் மடிந்துபோயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அருகிலிருக்கும் கோழிப் பண்ணையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Baung, Lampam, Terbol, Lundu போன்ற மீன் இனங்களின் சடலங்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி ஏற்பட்ட இந்த சம்பவமே, தாம் அங்கு தங்கியிருக்கும் இந்த 5 ஆண்டுகளில் பார்த்த மிகப் பெரிய சம்பவம் என குடியிருப்பாளர்களில் ஒருவர் கூறினார்.
கன மழையால் கோழிப் பண்ணையிலிருந்து கழிவு நீர் ஆற்றில் கலந்திருக்கலாம் என்றார் அவர்.
புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறையும் மீன்வளத் துறையும் விசாரணை நடத்தி, கருப்பு நிறத்தில் துர்நாற்றம் வீசும் நீர் ஓடை, கோழிக் கழிவு சேமிப்பு தளத்திலிருந்து வந்ததை உறுதிப்படுத்தின.
மீன்கள் செத்து மடிந்ததால் ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த மாசுபாடு பிரச்சனையைத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.