
புத்ராஜெயா, ஜூலை-28-அடுத்தாண்டு ஆறு வயதுடைய மாணவர்களை முதலாம் ஆண்டிற்கு வரவேற்க பெரும்பாலான பள்ளிகள் தயாராகி விட்டதாக கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்திருக்கிறார்.
அதற்கு ஏதுவாக பள்ளிகளைத் தயார்படுத்துவதற்கான உள்கட்டமைப்புத் திட்டங்கள், திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
புதிய மாணவர் சேர்ப்புக்கு பள்ளிகள் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஆசிரியர்களை நியமிப்பதும் அமைச்சின் ஆயத்தப் பணிகளில் அடங்கும்.
வசதிகளை ஆய்வு செய்யவும், ஆயத்தப் பணிகளை மதிப்பாய்வு செய்யவும், பணிகள் நிறைவடைந்த பள்ளிகள் சிலவற்றைத் தாமும் அமைச்சின் தலைமைச் செயலாளர் Datuk Wan Hashim Wan Rahimமும் நேரில் சென்று பார்வையிடவிருப்பதாகவும் அமைச்சகத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் Fadhlina கூறினார்.
2027-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்ப்பு நடைமுறை சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில் அதன் நடவடிக்கைகள் சீரானதாகவும், சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும், மிக விரிவான ஆயத்தப் பணிகளுடன் கூடியதாகவும் இருக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
6 வயதில் மாணவர்களை முதலாம் ஆண்டில் சேர்ப்பதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் பெற்றோரிடமிருந்து 3,51,789 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் கடந்த மார்ச் மூன்றாம் தேதி கல்வித் துணை அமைச்சர் Wong Kah Woh தெரிவித்திருந்தார்.
மற்றொரு நிலவரத்தில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பள்ளிகளை முன்னோட்டத் தளங்களாகத் தேர்ந்தெடுத்து, அமைச்சு தனது பள்ளி சீர்திருத்தத் திட்டத்தை அடுத்த வாரம் தொடங்கும் என Fadhlina கூறினார்.
ஒவ்வொரு மாவட்டமும் ஐந்து தொடக்கப் பள்ளிகளையும் ஐந்து இடைநிலைப் பள்ளிகளையும் தேர்ந்தெடுக்கும். அதற்கேற்ற திட்டங்களைச் செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் 100,000 ரிங்கிட் வரை நிதி உதவி வழங்கப்படும் என்றாரவர்.
சீர்திருத்தம் என்பது குறுக்கு வழிகளைக் கையாள்வது அல்ல. பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, அவற்றை மிகச் சிறந்தவையாக உருவாக்க, கலாச்சாரத்தை மாற்றுவது, சூழல் அமைப்பை உருமாற்றுவது, ஒட்டுமொத்தத்தில் பள்ளி சமூகத்தின் மனநிலையை மாற்றுவதுதான் சீர்திருத்தமாகும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.



