
புத்ராஜெயா, ஜூலை-28-ஆறாம் படிவம் தற்போதைக்கு உயர்க்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படாது. அது கல்வி அமைச்சின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கும்.
நடப்பிலுள்ள கல்வி முறை மற்றும் கற்பித்தல் திட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
ஆறாம் படிவத்தை இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வியின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து அரசாங்கம் இதற்கு முன்பு விவாதித்திருந்தது. எனினும் அதனை அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து மாற்ற காலம் பிடிக்கும்.
எனவே ஆறாம் படிவத்தைத் தற்போதைக்குக் கல்வி அமைச்சே தொடர்ந்து நிர்வகிக்கும். பிறகு தேவைப்பட்டால் அல்லது எதிர்காலத்தில் ஆறாம் படிவத்திற்கென கல்லூரிகள் நிறுவப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படலாம் என அன்வார் கூறினார்.
இவ்வேளையில், பள்ளி வளாகத்திலேயே ஆறாம் படிவ மாணவர்கள் தொடர்ந்து பயின்றாலும், அவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி பயிலும் மாணவர்களுக்கான வலுவான அடையாளம் வழங்கப்பட வேண்டும்.
உதாரணமாக ஆறாம் படிவத்திற்கென தனிக் கட்டிடம் இருக்க வேண்டும். பள்ளி முதல்வர்கள் இதனைத் தனி ஒரு திட்டமாக நிர்வகிக்க வேண்டும்.
ஆறாம் படிவ மாணவர்கள் சாதாரணமாகக் கருதப்படக்கூடாது. அவர்கள் இடைநிலைக் கல்விக்கு பிந்தைய மற்றும் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியை பயில்பவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.



