
நீலாய், பிப்ரவரி-21 – நெகிரி செம்பிலான் நீலாய் 3 பகுதியில் கம்பளத் தொழிற்சாலையில் இன்று காலை பெரும் தீ ஏற்பட்டதில், அந்த ஒரு மாடி கட்டடம் ஏறக்குறைய முழுவதுமாக சேதமடைந்தது.
அத்தொழிற்சாலை, சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீயில் அழிந்து, பின்னர் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடமாகும்.
இன்று மீண்டும் அது தீயில் அழிந்திருக்கிறது.
காலை 7.50 மணியளவில் தகவல் கிடைத்து நீலாய், மந்தின் 1, ரந்தாவ், சிரம்பான் 2 ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடம் விரைந்தன.
காலை 8.55 மணிக்கெல்லாம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீயில் எவரும் பாதிக்கப்படவில்லை எனக் கூறிய நெகிரி செம்பிலான் தீயணைப்புத் துறை, 1,200 சதுர அடியிலான அத்தொழிற்சாலையின் 80 விழுக்காட்டுக் கட்டடம் சேதமடைந்ததாகத் தெரிவித்தது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வரும் வேளை மொத்த இழப்பீடும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
அத்தொழிற்சாலையில் தீ கொளுந்து விட்டு எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் காலை முதலே சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.