
கோலாலம்பூர், மே-28-பார்ட்டி பெர்சாமா கட்சியை அதன் நிறுவனர் டான் ஜின் தீமிடமிருந்து ( Tan Gin Theam ) கைப்பற்றுவதற்காக 8.5 மில்லியன் ரிங்கிட் கொடுத்ததாகக் கூறப்படுவதை ரபிசி ரம்லி மறுத்தார்.
தனக்கும் ஜின் தீமிற்கும் இடையில் எந்தப் பணப் பரிவர்த்தனையும் இல்லாமல் பெர்சாமாவின் கையகப்படுத்தல் நடந்ததாக பண்டான் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ரபிஸி x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தக் குற்றச்சாட்டு இணையத்தில் பின்தொடர்பவர்களால் பரப்பப்படும் அவதூறு என்றும் அவர் விவரித்தார்.
இந்தக் கட்சியை தன்னிடமும் , பி.கே.ஆர் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட்டிடம் ஒப்படைத்தபோது ஜின் தீம் அழுதார்.
பெர்சாமாவை நாங்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், முன்பு தன்னால் முடிந்ததை விட சாதாரண மக்களை அக்கட்சி இன்னும் சிறப்பாகப் பாதுகாக்க வேண்டும் என்பதை மட்டுமே அவர் எங்களிடம் கேட்டுக்கொண்டார் என்று ரபிசி தெரிவித்தார்.
தற்போது 20,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ள பெர்சாமா குறித்து விரிவாகப் பேசிய அவர், கட்சி எதிர்காலத்தில் அதிகாரத்தைக் குறிவைக்காது என்றும் கூறினார்.
இதற்கிடையே , பெர்சாமாவில் (BERSAMA) வேட்பாளராக அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், ஆனால் ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியாகப் பரிசீலித்து மதிப்பீடு செய்யும் ஒரு வேட்பாளர் குழு இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



