
ஈப்போ, மார்ச் 20 -பேரா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகளை காப்பாற்றுவற்காக ஜெலப்பாங் வர்த்தக மையத்திலுள்ள மண்டபத்தில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.
பேரா மாநில தமிழ்ப்பள்ளியின் வாரியக் குழு மற்றும் பேரா persatuan kebajikan amal makmur எனப்படும் அமால் மாக்மூர் சமூகநல இயக்கத்தின் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்வி இலாகா தொடர்புடைய பல்வேறு அதிகாரிகளின் உரையும் இடம்பெற்றன.

பேராவில் 134 தமிழ்ப்பள்ளிகள் இருந்தபோதிலும் அவற்றில் 60 தமிழ்ப்பள்ளிகள் குறைந்த மாணவர்கள கொண்டதாக உள்ளது. இந்தப் பள்ளிகள் மூடும் அபாயம் இல்லை என்றாலும், மாணவர்களின் தொடர்ச்சியான சரிவினால் இப்பள்ளிகள் இயல்பாகவே மூடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
இதனை கருத்திற்கொண்டு நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் பல்வேறு கருத்துக்களும் ஆலோசனைகளும் விவாதிக்கப்பட்டதாக அமால் மாக்மூர் சமூக நல இயக்கத்தின் தலைவர் க. நாச்சி முத்து கூறினார்.

மாநில நிலையில் நடைபெற்ற இந்த கருத்தரரங்கில் பெற்றோர் சங்க பொறுப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி வாரியக் குழு பொறுப்பாளர்கள் , தலமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் திரளாக கலந்துகொண்டனர்.
ஆண்டுக்கு ஆண்டு தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டு வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக இருப்பதால் இதற்கு தீர்வுக்காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாச்சி முத்து வலியுறுத்தினார்.



