தைப்பிங், நவம்பர் 24 – வெறும் 10 மாணவர்களையும் 8 ஆசிரியர்களையும் மட்டுமே கொண்டு இயங்கும் மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, அறிவியல் தொழில்நுட்ப இலக்கவியல் கண்காட்சியை நடத்தி சாதனையைப் படைத்துள்ளது.
இப்பள்ளி அதன் அருகாமையில் அமைந்திருக்கும் கம்போங் பாரு பத்து மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜிபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, அலகார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் துரோங் இரப்பர் தோட்டத் தமிழ்ப்பள்ளியுடன் இணைந்து கடந்த நவம்பர் 21ஆம் திகதி, மாவட்ட அளவில் நடைபெற்ற கண்காட்சியையும், அதன் பயிற்சி நிறைவு விழாவையும் மிகச் சிறப்பாகத் தலைமையேற்று நடத்தியது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்ட கல்வி அமைச்சின் முயற்சிகளுக்குத் துணைநிற்கும் விதமாக, இந்த இலக்கவியல் கண்காட்சி அமையப்பெற்றிருந்தது.
சுமார் 80 மாணவர்களும் 40 ஆசிரியர்களும் கலந்து கொண்டு இக்கண்காட்சியில் பயன்பெற்றனர்.
இதனிடையே, லாருட் மாத்தாங் செலாமா மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த 5 பள்ளிகளின் 7 ஆசிரியர்களும் 12 மாணவர்களும் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தொழில்நுட்பத் துறையில் பட்டதாரிகளை உருவாக்கிவரும் தைப்பிங் ஏட்டேக் (ADTEC) எனப்படும் தொழிற்கல்வி கல்லூரியில் ரோபோதிக் வகுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதன் அதிகாரத் தொடக்க விழாவும் நிறைவு விழாவும் இந்நிகழ்ச்சியில், வெகு சிறப்பாகத் தைப்பிங் ஏட்டேக் (ADTEC) மையத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவனேசன் அச்சலிங்கம், இலக்கவியல் தொடர்பான மின்பொருள்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ந்து வழிநடத்த 10,000 ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தைப்பிங் வட்டாரத்தைச் சேர்ந்த தன்னார்வாளர்கள், முன்னாள் மாணவர்கள், தலைமையாசிரியர்கள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்