ஈப்போ, ஆகஸ்ட்-14 – பேராக், ஜாலான் டத்தோ பாங்லீமா புக்கிட் காந்தாங் வாஹாப்பில் (Jalan Dato Panglima Bukit Gantang Wahab) உள்ள KTMB ரயில் நிலைய சதுக்கத்தில், வேலையில்லாத ஓர் ஆடவர் இறைச்சி வெட்டும் கத்தியேந்தி ஆவேசமாக ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த போலீஸ் 31 வயது அவ்வாடவரை சமாதானப்படுத்த முயன்றது.
கத்தியைக் கீழே போடுமாறு போலீசார் கட்டளையிட்டும் கேட்காத சந்தேக நபர், பல தடவை போலீசாரை நோக்கி அதனைச் சுழற்றினார்.
இதனால் போலீஸ் குழு அந்நபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அவர் முரண்டு பிடித்தார்.
அதில் ஒரு போலீஸ்காரர் இடது கை முட்டியில் லேசான காயங்களுக்கு ஆளானார்.
கைதான நபரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நேராக சென்ட்ரல் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
தைப்பிங்கை முகவரியாகக் கொண்ட அந்நபர், குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் ஏற்கனவே 13 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அவர் தஞ்சோங் ரம்புத்தான், உலு கிந்தா பஹாகியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக போலீஸ் கூறியது.