பேரிழப்பு: தான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலாம்பூர், மே-10,
MAICCI எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழில் சங்க சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் ஆற்றல்மிக்க தொழில் முனைவோர் மட்டுமல்லாது, தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு சிறந்த ஆளுமை ஆவார்.
ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அன்னாருக்கு அவ்வாறு புகழ்மாலை சூட்டியுள்ளார்.
65 வயது கென்னன் ஈஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த 4 நாட்களாகக் கோலாலம்பூர் பந்தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.
இச்செய்தி குறிப்பாக இந்திய வணிக சமூகத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் இந்திய வர்த்தக சமூகம் எதிர்கொண்ட தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்க்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிக முக்கியமானவை என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தேசிய முன்னணி மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்குடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த அவர், MAICCI அமைப்பைத் தேசிய வர்த்தகக் கூட்டமைப்பில் அங்கீகாரம் பெறச் செய்தார்.
ஜோகூர் மாநில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்ட இவர், இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்.
எனவே, அன்னாரின் மறைவு இந்திய வர்த்தகத் துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பென விக்னேஸ்வரன் வருணித்தார்.
கென்னத் ஈஸ்வரனின் இறுதி சடங்குகள் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை, காஜாங் கன்ட்ரி ஹைட்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.



