
ஜித்ரா, ஜூன் 24 – 14.63 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திய 24 வயதுடைய தனியார் பல்கலைக்கழக மாணவன் இன்று ஜித்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான்.
ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனையுடன் கூடிய 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி புக்கிட் காயு ஹித்தாம் ICQS சோதனைச் சாவடியில், தாய்லாந்திலிருந்து மலேசியாவிற்குள் நுழைந்தபோது 14.63 கிலோகிராம் கஞ்சாவை கடத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 1.17 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதால், குற்றவாளியின் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. இரசாயன ஆய்வறிக்கைக்காக வழக்கு அக்டோபர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், அம்மாணவனிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் கஞ்சா பயன்படுத்தியதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன.



