
கோலாலம்பூர், ஜூன் 24 -ஆண்டுக்கு 30 லட்சம் அட்டைகள் வழங்கப்படும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய தலைமுறை ‘மை-காட்’ (MyKad) தயாரிப்பதற்கு அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 120 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு மைகார்டுக்கும் கட்டணம் செலுத்தும்’ (pay-per-issue) வகையிலான கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த உடன்பாட்டின்படி விண்ணப்பதாரர்களுக்கு வெற்றிகரமாக வழங்கப்படும் அட்டைகளுக்கு மட்டுமே அரசு பணம் செலுத்தும்.
ஒரு மை கார்ட்டுக்கான கட்டணம் 40 ரிங்கிட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் சைபுடின் குறிப்பிட்டார்.
இருப்பினும், எந்தவொரு ஆண்டிலும் வழங்கப்படும் அட்டைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே உண்மையான செலவு அமையும்.
அதே வேளையில் தற்போதைய அடையாள அட்டைகள் செல்லுபடியாகும் என்பதோடு அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தற்போது (MyKad) வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயமாகத் தங்கள் அட்டைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் சைபுடின் வலியுறுத்தினார்.
புதிய தலைமுறை மைகார்ட் அறிமுகமானது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்பதோடு, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே அது வழங்கப்படும்.
புதிய தலைமுறை MyKad அறிமுகப்படுத்தப்பட்டாலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கப்படும் 10 ரிங்கிட் தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்



