Latestமலேசியா

ஸ்ரீ சக்தி ஆசிரமத்தில் மகாகாளி மகா கும்பாபிஷேகம்; 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

ஜொகூர், ஜூன் 24 – முதல் சக்தி பீடமாக போற்றப்படும் ஸ்ரீ சக்தி ஆசிரமத்தில் அன்னை மகாகாளிக்கான மகா கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 21 ஆம் தேதி ஆன்மிக எழுச்சியுடனும் பக்தி பரவசத்துடனும் சிறப்பாக நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு குருஜி சக்திபிரியானந்தா அவர்களால் நிறுவப்பட்ட ஸ்ரீ சக்தி ஆசிரமம், ஆன்மிக மற்றும் சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில், மலேசியா முழுவதும் மட்டுமின்றி சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்தும் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஜூன் 19 முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் வேத மந்திர பாராயணம், ஸ்ரீ மகா கணபதி யாகம், வாஸ்து சாந்தி பூஜை, சுவாசினி பூஜை மற்றும் குமாரி பூஜை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் இடம்பெற்றன.

விழாவின் உச்சநிகழ்வாக, ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற மகாகாளி மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், தாங்கள் பெற்ற தெய்வீக அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குருஜி சக்திபிரியானந்தா, “அன்னை மகாகாளியின் அருள் அனைத்து பக்தர்களின் வாழ்விலும் ஆரோக்கியம், அமைதி, செழிப்பு மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை அருளட்டும்” என வாழ்த்துத் தெரிவித்தார்.

இதனிடையே, ஆசிரமம் முன்னெடுத்து வரும் ‘பிரியா வீல்ஸ்’ திட்டம், 100 குடும்பங்களுக்கு மாதாந்திர அரிசி வழங்கும் திட்டம் மற்றும் இலவச ஆன்மிக, யோகா மற்றும் வாழ்வியல் பயிற்சி வகுப்புகள் போன்ற சமூக நலத்திட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆசிரம நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், வருகிற ஜூலை 12ஆம் தேதி மகா சண்டி யாகமும், செப்டம்பர் 2 முதல் அக்டோபர் 19 வரை நவராத்திரி விரதமும் நடைபெறவுள்ளதாக ஆசிரம நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தி, சேவை மற்றும் ஆன்மிக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி ஆசிரமம், இந்த மகா கும்பாபிஷேகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஒருங்கிணைத்து, ஆன்மிக ஒற்றுமையின் சிறப்பான எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!