ஜோகூர் பாரு, ஆகஸ்ட் -26 – ஜோகூர், Skudai Pantai Lido-வில் சாலையில் அடாவடி செய்யும் கும்பலை, 2 பேருந்துகளின் உதவியுடன் போலீஸ் விவேகமாக முறியடித்துள்ளது.
சாலைத் தடுப்புச் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, சாலையின் குறுக்கே 2 பேருந்துகளை நிறுத்தி வைத்து, அந்த அடாவடி கும்பல் தப்பியோடாமல் போலீஸ் பார்த்துக் கொண்டது.
போலீசாரிடமிருந்து அந்த அதிரடி நடவடிக்கையை அக்கும்பல் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது.
இதனால் தப்பியோட வாய்ப்பில்லாமல் அவர்கள் போலீசிடம் சிக்கினர்.
அதில் மொத்தமாக 257 மோட்டார் சைக்கிள்களும் அவற்றில் வந்த 286 பேரும் பரிசோதிக்கப்பட்டனர்.
மேல் விசாரணைக்காக அவற்றில் 115 மோட்டார் சைக்கிள்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளோட்டும் உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளை மாற்றியமைத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 153 சம்மன்கள் வெளியிடப்பட்டன.
சாலைப் போக்குவரத்துத் துறை தனியாக 54 சம்மன்களையும், சுற்றுச் சூழல் துறை 46 சம்மன்களையும் வெளியிட்டன.
சாலையில் அடாவடி செய்யும் மற்றும் சட்டவிரோத மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் கும்பல்கள் குறித்து புகார் செய்யுமாறு பொது மக்களைப் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.