ஷா ஆலாம், ஜூலை-3 – சிலாங்கூர் ஷா ஆலாமில் தனது மகனின் தலைமுடி வெட்டப்பட்டதால் ஆசிரியரை தந்தை திட்டித் தீர்க்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
ஷா ஆலாமில் உள்ள தனியார் சமயப் பள்ளியொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
மகனின் முடியை வெட்டியதற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் பெறுவதற்காக சென்ற போது தந்தை உரத்தத் குரலில் ஆசிரியரை ஏசியுள்ளார்.
“கட்டணம் செலுத்தி படிக்கும் தனியார் பள்ளி என்பதால் உங்கள் இஷ்டத்திற்கு செய்வீர்களா? நீங்கள் ஆட்டுவிக்க அவர்கள் ஒன்றும் விலங்குகள் அல்ல, பிள்ளைகள். கேட்க நாங்கள் இருக்கிறோம்” என கோபத்தில் தந்தை கொந்தளிப்பது அந்த 1 நிமிட 20 வினாடி விடியோவில் தெரிகிறது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களோ, அந்த தந்தையின் ‘ஆவேசத்தை’ கண்டு முகம் சுளித்தனர்.
இது பேசித் தீர்க்கப்பட வேண்டிய சாதாரண விஷயம். இப்படி பொது வெளியில் ஆசிரியரை மோசமாகத் திட்டுவது முறையல்ல என ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்கள் பள்ளியில் கட்டொழுங்குடன் இருப்பது ஆசிரியர்களின் பொறுப்பு. தவறு செய்யும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதென்றால் உங்கள் பிள்ளைகளை ஏன் பள்ளிக்கு அனுப்புகிறீர்கள். வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என இன்னொருவர் காட்டமாக கருத்து பதிவேற்றியுள்ளார்.
ஆண் மாணவர்கள் நீளமாக முடி வளர்த்தால் வெட்டாமல் கொஞ்சுவார்களா என்ற தோரணையில் ஒரு நெட்டிசன் கருத்துப் பதிவேற்றியது கவனத்தை ஈர்த்தது.