
பாரிஸ், ஜூலை 11 – மொராக்கோவில் விடுமுறைக் காலத்தைக் கழிக்க தனது மனைவியுடன் பயணித்த பாரிஸைச் சேர்ந்த 62 வயது வயோதிகர் ஒருவர், வாகனத்திற்கு எண்ணெய் ஊற்றி விட்டு பெட்ரோல் நிலையத்திலேயே தனது மனைவியை மறந்து விட்டுச் சென்ற சம்பவம் பெரும் வேடிக்கையாயுள்ளது.
அந்த பெட்ரோல் நிலையத்திலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரம் வரை கார் ஓட்டிய பிறகுதான் தனது மனைவி காரில் இல்லை என்பதையே அவர் உணர்ந்திருக்கின்றார்.
இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அவர்களின் 22 வயது மகளும் காரினுள் இருந்திருக்கின்றார் என்றும் அவருடைய அம்மா தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை தனது அப்பா அங்கு விட்டுச் சென்றதை ஒருபோதும் தான் உணரவில்லை என்றும் கூறியிருந்தார்.
அவசர சேவை மையத்தை உதவிக்கு அழைத்த அவருக்கு எந்த பெட்ரோல் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தினார் என்பது நினைவில் இல்லை என்றும் குறிப்பிட்ட அந்த நகரத்தின் பெயரை மட்டுமே உதவி மையத்தினரிடம் கூறியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளால் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட அந்த பெண் தனது கணவர் தன்னை அழைத்துச் செல்ல திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில், அவ்விடத்தை விட்டு நகராமல் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒன்றிணைந்த அவர்கள் மீண்டும் தங்களுடைய விடுமுறைக்கால பயணத்தை தொடர்ந்துள்ளனர் என்று உள்ளூர் ஊடகம் கூறியுள்ளது.