மோஸ்கோ, ஜூன்15 – யுக்ரேய்னில் போர் நிறுத்தம் செய்வதற்கு 2 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin).
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் (NATO) இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்;
ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிரதேசங்களில் இருந்து யுக்ரேய்ன் தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதே அந்நிபந்தனைகளாகும்.
அவ்விரு நிபந்தனைகளுக்கும் ஒப்புக் கொண்டால் உடனே போரை நிறுத்த உத்தரவிடுவதோடு, அமைதிப் பேச்சுவார்த்தையையும் தொடங்க ரஷ்யா தயார் என புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
யுக்ரேய்ன் அவற்றை நிராகரித்தால், ரத்தம் சிந்துவதை நிறுத்தும் எண்ணம் அதற்கு இல்லை என்றே அர்த்தம் என்றார் அவர்.
இத்தாலியில் G7 நாடுகளின் தலைவர்களின் உச்ச நிலை மாநாடு மற்றும் யுக்ரேய்னில் அமைதியை ஏற்படுத்துவதற்காக சுவிட்சர்லாந்தில் உலகத் தலைவர்கள் சந்தித்து பேசவிருக்கும் நிலையில், புதின் அத்திட்டத்தை அறிவித்துள்ளார்.
எனினும் சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் புதின் பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்ய-யுக்ரேய்ன் போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.