மூவார், ஜூலை-5 – ஜொகூர், மூவாரில் ரோந்துப் போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கார் தடம்புரண்டு ஆற்றுப் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்ததில், ஆடவர் உடல் கருகி மாண்டார்.
பாரிட் கொங்சி (Parit Kongsi), ஜாலான் பெந்தேங்கில் (Jalan Benteng) வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
துரத்திச் சென்ற ரோந்துப் போலீஸ் வாகனமும் அதே ஆற்றில் கவிழ்ந்ததில், அதிலிருந்த இரு போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
அவர்கள் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்திற்கு முன்பாக, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அவ்விருவரும் பாரிட் ஜாவா சிற்றூரில் சோதனைக்காக சந்தேக நபரின் காரை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் சுதாகரித்துக் கொண்ட அவ்வாடவன் தனது Toyota Vios காரை பாரிட் ஜாமில் (Parit Jamil) நோக்கி வேகமாக ஓட்டினான்.
எச்சரிக்கை ஒலியை எலுப்பிக் கொண்டே போலீசும் பின்னால் துரத்த, அவன் காரை நிறுத்துவதாக இல்லை.
தலைத்தெறிக்க ஓடிய அந்த Toyota காரும், விரட்டிச் சென்ற ரோந்து வாகனமும் ஒரு கட்டத்தில் ஒரே ஆற்றுப் பள்ளத்தில் விழுந்தன.
விழுந்த வேகத்தில் Toyota கார் தீப்பற்றிக் கொண்டதால், காரோட்டி உள்ளேயே சிக்கி உடல் கருகி மாண்டான்.