
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-14- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்னோர் உறுப்பினரை மக்களவைக்கு வெளியே சண்டையிட்டுக் கொள்ள அழைத்த சம்பவம் தொடர்பில், சபநாயாகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் வரும் திங்கட்கிழமை முடிவெடுக்கவுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பான வீடியோ, ஒலிநாடா பதிவுகளை ஆதாரங்களாக சமர்ப்பிக்குமாறு, அவைப் பணியாளர்களுக்கு தாம் உத்தரவிட்டிருப்பதாகவும், அது நடந்தது உறுதியானால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் சொன்னார்.
உடல் ரீதியாக பிரச்னை போகும் போது, அது வரம்பு மீறியதாகும்; என்றாலும் இப்போதைக்கு தாம் யாரையும் பழிபோட விரும்பவில்லை; முழு விசாரணைக்குப் பிறகு திங்கட்கிழமை முடிவை எதிர்பாருங்கள் என ஜொஹாரி கூறினார்.
நேற்று மக்களவையில் 13-ஆவது மலேசியத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜெலுத்தோங் உறுப்பினர் RSN ராயருக்கும், பெண்டாங் உறுப்பினர் டத்தோ அவாங் சொலாஹுடின் ஹஷிம் (Datuk Awang Solahuddin) இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா தோல்வி கண்டிருப்பதாக அவாங் கூறியதை அடுத்து அந்த அமளி வெடித்தது.
இதையடுத்து “அவைக்கு வெளியே வா, சண்டையிட்டுக் கொள்ளலாம்” என்ற அர்த்ததைக் குறிக்கும் சைகையை அவாங் காட்டுவது போன்ற வீடியோக்கள் முன்னதாக வைரலாகின.
இதையடுத்து அவாங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோத்தா மலாக்கா உறுப்பினர் Khoo Poay Tiong கோரிக்கை விடுத்திருந்தார்.