தோக்யோ, மே-5, ஜப்பானில் மக்கள் தொகை சுருக்கத்தால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டியுள்ளது.
கடந்தாண்டு மட்டுமே 3.85 மில்லியன் வீடுகள் காலியாகின.
2003-ஆம் ஆண்டில் காலியான வீடுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, இது 80 விழுக்காட்டுக்கும் அதிகம் என ஜப்பானிய அரசாங்கத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2018-ஆம் ஆண்டுக்குப் பிறகே ஆக அதிகமாக 3 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் கைவிடப்பட்டதாக, ஒவ்வோர் ஐந்தாண்டுக்கும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகின் இரண்டாவது மிக வயது மூப்பான மக்கள் தொகையைக் கொண்டிருப்பதோடு, பிறப்பு விகிதமும் படு பாதாளத்திற்குச் சரிந்துள்ள ஜப்பானில், கிராமப்புறங்களில் தான் இப்பிரச்னை பரவலாக உள்ளது.
கிராமங்களில் கைவிடப்பட்ட வீடுகள் பெரும்பாலும், பெரு நகரங்களில் வசிக்கும் மக்களுக்குச் சொந்தமானவை; அதாவது, உறவினர்களிடமிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்ட வீடுகள் அவை.
அதே சமயம், வீடுகளைப் புதுப்பிக்க முடியாத அல்லது விரும்பாதவர்களும் அவற்றை உறவினகளிடமே கொடுத்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது.
அப்படிப் பெறப்பட்ட வீடுகளை பலர் கிடப்பில் போட்டு விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
எனவே தான், கிடப்பில் போடப்பட்ட சொத்துக்களை இடிக்கவோ, விற்கவோ அல்லது மீண்டும் பயன்படுத்தவோ நடவடிக்கை எடுக்குமாறு உரிமையாளர்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜப்பானில் பிறப்பு விகிதச் சரிவு 2023-இல் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை விட அங்கு 2 மடங்கு அதிகமாக இறப்பு விகிதம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.