
தெலுக் இந்தான், அக்டோபர் 16 –
“இந்த மடானி அரசாங்கம் மக்களுக்கானது; மலாய், சீனர், இந்தியர், ஓராங் அஸ்லி பூர்வக்குடியினர் என கருதாமல் அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கம்” என கூறியுள்ளார் பேராக் ஆட்சிக் குழு உறுப்பினரும் Pasir Bedamar சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங் (Woo Kah Leong) தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் Sentuhan Kasih நல்லெண்ணத் திட்டத்தில் பங்கேற்று மொத்தம் RM 1,154,000 மதிப்பிலான மானியத்தை வழங்கிய பிறகு அவர் அவ்வாறு கூறினார்.
அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சருமான ங்கா கோர் மிங் பணிப்படையினருக்குத் தலைமையேற்று, வூ கா லியோங் அங்குள்ள 11 தமிழ்ப் பள்ளிகளுக்கும் நேரில் வருகை மேற்கொண்டார்.
அதன் போது, பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட நிலவரங்கள் குறித்து நிர்வாகத்துடன் கலந்தாய்வு செய்த அவர், அமைச்சர் சார்பில் மானியங்களையும் ஒப்படைத்தார்.
ஒவ்வொரு பள்ளியின் தேவைக்கூற்ப மானியங்கள் வழங்கப்பட்டன. அதோடு, வகுப்பறைகளில் ஆர்வத்துடன் மாணவர்கள் கல்வி கற்பதையும் அவர் நேரில் சென்று கண்டதோடு, அவர்களோடும் அளவளாவினார்.
இதனிடையே, மாநில ஆட்சிக் குழு உறுப்பினரின் வருகையால் மகிழ்ந்த தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகத்தினர், நிதி ஒதுக்கீட்டுக்கான அமைச்சர் ங்கா கோர் மிங்கிற்கும் நன்றித் தெரிவித்துக் கொண்டனர்