
ரவாங், மே-6- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது மலாயாவின் விடுதலைக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகப் போராடி உயிரை விட்டவர் மலாயா கணபதி எனப்படும் எஸ்.ஏ. கணபதி.
அவர் தூக்கிலிடப்பட்டு 76 ஆண்டுகளாகி விட்டது; கணபதியுடன் தோள் கொடுத்து நின்று உயிர் நீத்தவர் பி. வீரசேனன்.
அவ்விருவரும், அப்போதைய PMFTU எனப்படும் அனைத்து மலாயா தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆவர்.
கணபதி மற்றும் வீரசேனன் இருவரும் 1946 முதல் 1948 வரை மலாயா மே தின கொண்டாட்டங்களில் மிகவும் பரிச்சயமான முகங்களாவர்.
அப்பேரணிகளின் போது அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கைகளில், இன்று நமக்கு மிகவும் சாதாரணமாகத் தெரியும் பல்வேறு அடிப்படைத் தேவைகளும் அடங்கும்.
“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்; தொழிலாளர்கள் ‘கூலிகள்’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக தொழிலாளர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்; மே 1 சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக அனுசரிக்கப்பட வேண்டும்; தினக்கூலி உயர்வு” உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.
அவர்களின் தியாகம் நீண்ட காலமாக மறக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில், சிலாங்கூர், ரவாங், பத்து ஆராங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.
1930, 1940-ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த முன்னாள் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் விளையாட்டு கிளப்பில் அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தான், போராட்டக் காலத்தில் தொழிலாளர்களை பெருந்திரளாகத் திரட்டி கணபதி பல்வேறு நடவடிக்கைகளையும் கூட்டங்களையும் நடத்தினார்.
அதன் அடையாளமாகத் தான் அதே இடம் இந்த நினைவேந்தலுக்குத் தேர்வு செய்யப்பட்டது.
கணபதி மற்றும் வீரசேனனின் அசாதாரண கதையைக் கேட்க, பல்லின மக்களைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட 30 பேர், அருகிலிருந்தும் தொலைதூரத்திலிருந்தும் வந்திருந்தனர்.
நிகழ்வின் ஒரு பகுதியாக ஒரு பாரம்பரிய நடைப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் போது, பங்கேற்பாளர்கள், ஆயிரம் தொழிலாளர்களைப் பணியமர்த்திய நிலக்கரிச் சுரங்கத்தின் தடங்களை மட்டுமல்லாமல், சுரங்கப்பாதைகளுக்கான செங்கல் தொழிற்சாலை, மரம் அறுக்கும் ஆலை மற்றும் தொழிலாளர் குடியிருப்புகள் போன்ற பிற தொடர்புடைய தொழில்களையும் நேரில் கண்டனர்.
பலர் பயன்பெற்ற இந்நிகழ்வு இதே பத்து ஆராங்கில் தொடரவிருப்பதாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த பி.சந்திரசேகரன் கூறினார்.