ஜெலுத்தோங், ஏப்ரல் 9 – சம்ரி வினோத் காளிமுத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் தாம் பேசியப் பேச்சுகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என பினாங்கு, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
எனவே சம்ரி வினோத்திடம் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அந்த DAP அரசியல்வாதி கூறினார்.
என் கருத்தில் நான் உறுதியாக உள்ளேன்; ஆகையால் சம்ரி வினோத்தை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கிறேன் என அறிக்கையொன்றில் ராயர் கூறினார்.
இந்து மதத்தை இழிவுப்படுத்தியற்காக தம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியதற்காக, ராயர் மன்னிப்புக் கேட்ட வேண்டும் என இஸ்லாமிய சுயேச்சை சமயச் சொற்பொழிவாளருமான சம்ரி வினோத் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
அதோடு, தான் பேசியவற்றை 14 நாட்களுக்குள் ராயர் மீட்டுக் கொண்டு அறிக்கை விட வேண்டும் என சம்ரி வினோத் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“இந்துக் கடவுளான சிவபெருமானை இழிவுப்படுத்தி காணொலி வெளியிட்டதாகக் கூறி, எனக்கு எதிராக 2021-ஆம் ஆண்டு செய்யப்பட்ட போலீஸ் புகார்களைத் தொடர்ந்து நான் கைதுச் செய்யப்பட்டேன். 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பிறகு, மேல் நடவடிக்கை இல்லை எனக் கூறி நான் விடுவிக்கப்பட்டேன்.”
அப்படியிருக்க ராயர் மீண்டும் அதே குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தில் முன் வைப்பது எப்படி நியாயம் என சம்ரி வினோத் திங்கட்கிழமை நடத்தியச் செய்தியாளர் சந்திப்பில் கேட்டார்.