மருத்துவமனை கண்காணிப்பு அமைப்பு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்து – மலேசிய மருத்துவச் சங்கம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – அரசாங்க மருத்துவமனையின் கண்காணிப்பு அமைப்பு பாதுகாப்பற்றது என்றும் ஆடை அணியாத நோயாளிகளை அது அம்பலப்படுத்தக்கூடிய வகையில் அமைந்திருப்பதாக மலேசிய மருத்துவச் சங்கம் குற்றச்சாட்டியிருக்கிறது.
சுங்கை பூலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கேமராக்கள் இருப்பதாக ஊழியர்கள் எழுப்பிய கவலைகளை வெளிபடுத்திய மலேசியாகினி செய்தியை தொடர்ந்து, பொறுப்புள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, பல மருத்துவமனை ஊழியர்கள் Trauma சிகிச்சை பிரிவில், நோயாளிகளின் உயிர்காக்கும் நடைமுறைகள் செய்யும் சூழ்நிலைகளில் நோயாளிகளின் உடைகள் அகற்றப்படும் என்றனர்.
அப்போது, அங்குள்ள கண்காணிப்பு அமைப்பின் நேரடி ஒலிபரப்பு சம்பந்தமில்லாத ஊழியர்கள் மற்றும் பிற நோயாளிகளால் பார்க்கும் நிலையில் உள்ளதை தெரிவித்துள்ளனர்.
நோயாளியின் தனியுரிமை சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால் அரசாங்கத்திடம் இருந்து பதிலை ஓர் அறிக்கையின் வாயிலாக கோரியிருக்கிறார் மலேசிய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசிசான் அப்துல் அஜீஸ் (Dr Azizan Abdul Aziz).
இது குறித்து விவரித்த தலைமை மனித உரிமைகள் மூலோபாய நிபுணர் ஃபிர்தௌஸ் ஹுஸ்னி (Firdaus Husni), தனிப்பட்ட தரவுகளைக் கையாளும் போது முறையான நடைமுறைகளை மருத்துவமனைகள் கொண்டிருக்க வேண்டும் என்றும் அது குறித்து நோயாளிகளுக்கு நோட்டீஸ் வழங்குவது அவசியம் என்றும் கூறியுள்ளார்.