Latestமலேசியா

மருத்துவ கவனக்குறைவு வழக்கில் இழப்பீடு செலுத்துவதில் தோல்வி; RM8.3 மில்லியன் ரிங்கிட்டை கட்ட தனியார் மருத்துவமனைக்கு 2 வாரக் காலக்கெடு

கோலாலம்பூர், ஜூலை-11 – மருத்துவ அலட்சியம் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் 8.32 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தாததால் பறிமுதல் மற்றும் விற்பனை உத்தரவு மூலம் தண்டிக்கப்பட்டுள்ள ஒரு தனியார் மருத்துவமனை, ஜூலை 23-ஆம் தேதிக்குள் அத்தொகையை செலுத்த வேண்டும்.

தவறினால், மருத்துவமனையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் பாங்கியில் உள்ள அந்த இஸ்லாம் அஸ்-சஹ்ரா மருத்துவமனை, Medic-Circle Sdn Bhd நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

மருத்துவ அலட்சியம் காரணமாக தங்கள் குழந்தை பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, புதிதாகப் பிறந்த குழந்தையின் குடும்பத்தினரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவமனையில் அலட்சியமான மகப்பேறு சேவைகளின் விளைவாக, 2003-ஆம் ஆண்டு தங்கள் குழந்தை 26 வாரங்களிலேயே குறைப்பிரசவத்தில் பிறந்ததாகக் குடும்பத்தினர் வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு அவ்வழக்கில் தோல்வியடைந்த பிறகு, நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை வட்டியுடன் செலுத்த மருத்துவமனை தவறியதால், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பறிமுதல் மற்றும் விற்பனைக்கான உத்தரவைப் பிறப்பித்தது.

இதையடுத்து மருத்துவமனையின் உபகரணங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

அவை வளாகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படாமல் இருப்பதை உறுதிச் செய்வதற்காக மருத்துவமனையில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மருத்துவமனை வழக்கம் போல் செயல்பட்டு வருவதாகவும், பார்வையாளர்கள் வளாகத்திற்குள் நுழைந்து வெளியேறுவதாகவும் தெரியவந்துள்ளது.

இது சுகாதார அமைச்சின் கவனத்திற்குச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!