லாஸ் வேகாஸ், ஜூன் 18 – 2020-ஆம் ஆண்டில், கோவிட்-19 தொற்று உச்சத்தில் இருந்த போது, வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பாலைவன சிற்ப பாறை ஒன்று மீண்டும் அமெரிக்கா, லாஸ் வேகாஸில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில், லாஸ் வேகாஸின், வடக்குப் பகுதியிலுள்ள, காஸ் பீக் (Gass Peak) அருகே, “ஹைகிங்” (hiking ) எனப்படும் நடைபயணப் பாதையில், அந்த மர்மமான நீண்ட பாறை சிற்பம் தோன்றியதாக கூறப்படுகிறது.
அதன் புகைப்படங்களை, லாஸ் வேகாஸ் போலீஸ் தனது X சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது.
“முறையான திட்டமிடல் இன்றி மக்கள் பயணம் செய்யும் போது, விசித்திரமான பல விஷயங்களை அவர்கள் காண நேரிடலாம். அந்த வரிசையில், இந்த புகைப்படங்களை பாருங்கள்” என அந்த பதிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பதிவுடன், உயரமான வடிவம் கொண்ட பாலைவன பாறை சிற்பம் ஒன்றின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அதே போன்ற, மர்மமான உருவம், 2020-ஆம் ஆண்டு, கோவிட்-19 பெருந் தொற்று உச்சத்தில் இருந்த போது, லாஸ் வேகாஸ் நகரில் தோன்றியது.
அதற்கு முன், உட்டாவின் (Utah) தொலைத்தூர பகுதியிலும், அதுபோன்ற மர்ம உருவம் அடையாளம் காணப்பட்டது.
எனினும், சில நாட்களில் அவை சொந்தமாக மறைந்து போனதாக கூறப்படுகிறது.
பிரிட்டன், ருமேனியா (Romania) உட்பட இதர சில இடங்களில் அடிக்கடி அதுபோன்ற மர்ம பாறை சிற்பங்கள் தோன்றுவது வழக்கமாகும்.
எனினும், அதன் பின்னால் ஒழிந்திருக்கும் மர்மம் என்ன என்பது தொடர்பில், ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் வேளை ; தற்போதுள்ள அதீத வெப்ப காலத்தில், பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.