அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 19 – கோலா நெராங்கில் (Kuala Nerang) உள்ள பேடு (Pedu) ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால், கம்போங் மோங் கஜாவில் (Kampung Mong Gajah), 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கல்லறைகள் வெளிப்பட்டுள்ளன.
இதனிடையே, கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 நெருங்கிய உறவினர்களும் உள்ளூர்வாசிகளும் கல்லறைகளைப் பார்வையிடவும், அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1960களில் பேடு அணை திட்டத்திற்காக இப்பகுதியில் உள்ள சுமார் 15 கிராமங்கள் நீரில் மூழ்கியதாக, பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படாங் தேராப் (Padang Terap) நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் அமீன் ஹமீட் (Nurul Amin Hamid) கூறினார்.
தற்போது, பேடு அணையில் நீர்மட்டம் 33.2% ஆகவும், முடா அணை (Muda Dam) மற்றும் அஹ்னிங் அணையில் (Ahning Dam) முறையே 7.8% மற்றும் 78.5% நீர்மட்டம் இருப்பதாக மூடா விவசாய மேம்பாட்டு ஆணைய இணையதளம் காட்டுகிறது.