
மலாக்கா, மே 29 – மலாக்கா போக்கோக் மாங்கா (Pokok Mangga) பகுதியில் உள்ள ஒரு கடை வீட்டில், மெத்தைக்குள் சுற்றப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய மனித சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
பல நாட்களாக வாடகையாளரை தொடர்புகொள்ள முடியாததால் வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சோதித்தபோது துர்நாற்றம் வீசியது. பின்னர் மெத்தையில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சடலம் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை பழமையானதாக இருக்கலாம் என்றும், உடல் கடுமையாக அழுகியதால் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 40 வயதுடைய வேலையில்லா ஆடவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் ‘ஷாபு’ போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததுடன், ஏழு குற்றப் பதிவுகளும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



