ஷா ஆலாம், டிசம்பர்-1,மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவைப் பெறுவதில் பெர்சாத்து கட்சி பெரும் சவாலை எதிர்நோக்குகிறது.
அக்கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசினே அதனை ஒப்புக் கொண்டுள்ளார்.
பெர்சாத்துவை ஆதரிக்க அவர்கள் இன்னமும் தயக்கம் காட்டுவதாக, ஷா ஆலாமில் நடைபெற்ற அக்கட்சியின் ஆண்டுப் பொதுப் பேரவையில் உரையாற்றிய போது அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.
ஆகக் கடைசியாக நடைபெற்ற இடைத்தேர்தல்கள் மற்றும் கடந்தாண்டு நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெர்சாத்து மன்றும் பெரிக்காத்தான் நேஷனல் பெற்ற வெற்றியானது, மலாய்க்கார மற்றும் பூமிபுத்ராக்களின் வலுவான ஆதரவால் கிடைத்தவை.
மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவு இருந்தாலும், அது போதாது; இன்னும் வலுவடைய வேண்டுமென பேராளர்களை முஹிடின் கேட்டுக் கொண்டார்.
புதிய தேசியவாத மலேசியாவுக்காக போராடும் கட்சி என்ற வகையில், மீண்டும் புத்ராஜெயாவைக் கைப்பற்ற மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் ஆதரவை மட்டுமே பெர்சாத்து நம்பியிருக்க முடியாது.
பெர்சாத்து – பெரிக்காத்தான் தலைமையில் அமையும் மத்திய அரசாங்கம் பல்லின மக்கள் கொண்ட அரசாங்கமாக விளங்கும் என்றார் அவர்.
பெரிக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் சீனர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மலாய்க்காரர் அல்லாதோர், தங்களின் உரிமை குறித்து கவலைப் பட வேண்டியதில்லை.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கட்டிக்காக்கப்படுமென முஹிடின் உத்தரவாதம் அளித்தார்.
இதனிடையே, சீனர்களின் உரிமைகளுக்காகக் போராடும் Dong Zong போன்றதொரு அமைப்பை மலாய்க்காரர்களுக்காகவும் அமைக்க வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
இதன் மூலம் மலாய்க்காரர்களையும் பூமிபுத்ராக்களையும் கட்சி எல்லை கடந்து ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்க முடியுமென்றார் அவர்.