
கிள்ளான், அக்டோபர்-8,
மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு முக்கிய நிகழ்வாக, அ. சு. பாஸ்கரன் எழுதிய “மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் எழுச்சிமிகு வரலாறு — தோற்றம், மாற்றம், ஏற்றம்” என்ற நூல் வெளியீடு கண்டுள்ளது.
மலேசியக் கல்வித்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் பெற்ற பாஸ்கரன், இந்நூலின் மூலம் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் பயணத்தைப் பதிவுச் செய்துள்ளார்.
நேற்று கிள்ளான், விண்டம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டுக்கு விழாவுக்கு, ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையேற்றார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் தான் ஸ்ரீ Dr எஸ். சுப்பிரமணியம், மூத்த அரசியல்வாதியும் தமிழ் ஆர்வலருமான தான் ஸ்ரீ க. குமரன், முன்னாள் துணையமைச்சர் டத்தோ பி. கமலநாதன், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பி. சகாதேவன், மலேசியத் தமிழ்ப்பள்ளி வாரியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் தலைமையாசிரியருமான டத்தோ கரு.இராஜமாணிக்கம், மலாயாப் பல்கலைக்கழக முன்னாள் இணைப்பேராசிரியர் முணைவர் கிருஷ்ணன் மணியம் உள்ளிட்ட தலைவர்களும் பிரமுகர்களும் சிறப்பு வருகைபுரிந்தனர்.
“இந்நூல் எதிர்கால தலைமுறைகளுக்கு, மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றுத் தடங்களை நினைவாகப் பதியச் செய்யும் ஓர் ஆவணமாகும்”என பாஸ்கரன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் வரலாற்றைப் பேசும் இந்நூல் வெளியீடு, காலத்திற்கு ஏற்ற உன்னத முயற்சி என டத்தோ ஸ்ரீ சரவணன் உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டினர்.
இந்நூல் மாணவர்கள் உள்ளிட்ட அடுத்தத் தலைமுறைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பொக்கிஷம் என, வந்திருந்த ஆசிரியர் பெரும்மக்கள் சிலரும் கருத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.