
கம்போடியா, டிசம்பர் 26 – கம்போடியா–தாய்லாந்து எல்லையில் நடந்து வரும் பதற்ற நிலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தாய்லாந்து போர் விமானங்கள் எல்லை பகுதிகளில் பெருமளவில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக கம்போடியா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை தாய்லாந்து போர்விமானங்கள் கம்போடியா கிராமப் பகுதியில் சுமார் 40 குண்டுகளை வீசியதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல், இருநாட்டு அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்திலேயே நடைபெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கம்போடியா-தாய்லாந்து எல்லை மோதல் சமீப மாதங்களில் மீண்டும் வன்முறை நிலைக்கு திரும்பி, இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
இரு நாடுகளின் அதிகாரிகள் தற்போது எல்லைச் சோதனைச் சாவடியில் மூன்றாம் நாளாக அமைதி பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்டகால எல்லைத் தகராறு மற்றும் பழமையான கோவில் உரிமை இந்த மோதலின் அடிப்படை காரணமாகக் காணப்படுகிறது.



