பெய்ஜிங், ஜூன் 26 – மலேசியா தனது சுவை மிகுந்த டுரியான் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளது.
அதன் வாயிலாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும், சீனாவின் பரந்த சந்தையில் மலேசியா கால்பதிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அதனால் எதிர்கொள்ளப்போகும் தளவாட சவால்கள் குறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
சீனப் பிரதமர் லீ கியாங், கடந்த வாரம் மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டதை அடுத்து, சீனாவில் டுரியான்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது.
மலேசியாவின் அடையாளமாக திகழும் மூசாங் கிங் வகை டுரியான்களை அதிக விலை கொடுத்து வாங்கி உண்கின்றனர் சீனர்கள்.
இதற்கு முன், தாய்லாந்தை அடுத்து உலகின் மிகப் பெரிய டுரியான் உற்பத்தி நாடாக திகழும் மலேசியாவிற்கு, முழு உறைய வைக்கப்பட்ட பழங்களையும், டுரியான் சார்ந்த தயாரிப்புகளையும் மட்டுமே சீனாவில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மலிவான டுரியான்களை ஏற்றுமதி செய்யும் தாய்லாந்து, வியட்நாம் ஏற்றுமதியாளர்களிடமிருந்து கடுமையான போட்டி நிலவும் என்றாலும், சீனாவிற்கு டுரியான்களை அனுப்ப முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கோலாலம்பூரை சேர்ந்த டுரியான் ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
எனினும், ஏற்றுமதி நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன், பயண சிக்கல்களை களைய வேண்டியுள்ளது.
மலேசியாவில், முழுமையாக பழுத்த டுரியான் பழங்கள் தான் அறுவடை செய்து விற்கப்படுகின்றனர். அந்த பழங்களை மூன்று நாட்களில் உண்டுவிட வேண்டும்.
எனினும், சீனாவை விமானம் வாயிலாக சென்றடையவே 36 மணி நேரம் தேவைப்படுவதால், டுரியான்கள் பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.