சிங்கப்பூர், ஆகஸ்ட்-23 – மலேசியாவில் போக்குவரத்து சம்மன்களை வைத்திருக்கும் சிங்கப்பூர் வாகனமோட்டிகள், VEP எனப்படும் வெளிநாட்டு வாகனங்களுக்கான நுழைவு பெர்மிட் முறை நடைமுறைக்கு வந்ததும், அமுலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்வர்.
வெளிநாட்டு வாகனமோட்டிகள் மலேசியாவில் சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதிச் செய்யும் பொருட்டு, வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் மலேசிய-சிங்கப்பூர் தரைவழி எல்லைப் பகுதியில் VEP பதிவுமுறை முழுமையாக அமுலுக்கு வருகிறது.
என்றாலும், அப்புதிய முறையுடன் வாகனமோட்டிகள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள டிசம்பர் 31 வரை வாய்ப்பு வழங்கப்படும்.
எனவே, அபராத பாக்கி வைத்திருக்கும் வெளிநாட்டு வாகனங்கள் டிசம்பர் 31 வரை மலேசியாவுக்குள் நுழையவும், இங்கிருந்து வெளியேறவும் அனுமதிக்கப்படும்.
என்றாலும், அக்டோபர் முதல் தேதி தொடங்கி மலேசியாவிலிருந்து வெளியேறும் போது, அபராத பாக்கியை செலுத்த அவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஆனால், அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அமுலாக்க நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, VEP விதிமுறைகளை மீறும் வெளிநாட்டு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக இரண்டாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது 6 மாத சிறை விதிக்கப்படும்.