கோலாலம்பூர், ஏப்.23- மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் வாரியக் குழு உறுப்பினராக, பினாங்கு பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம், எதிர்வரும் மே 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது.
கெஅடிலான் பாயான் பாரு தொகுதி உதவித் தலைவருமான குமரேசனின் நியமன உறுதி கடித்தை, தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை அமைச்சர் டத்தோ இவோன் பெனெடிக் சார்பில் அதன் துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நேற்று மதியம் தமது பேங்க் ராக்யாட் அலுவலகத்தில் எடுத்து வழங்கினார்.
“தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து மிகச் சிறந்த முறையில் பணியாற்றிட குமரேசனுக்கு எனது வாழ்த்துகள். மலேசிய கூட்டுறவு ஆணையத்தை அடுத்தக் கட்ட உயர்வுக்குக் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக குமரேசனின் பங்களிப்பு இருக்க வேண்டும்” என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இதனிடயே, தம்மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கும், கூட்டுறவு ஆணையத்தின் வழி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்திருக்கும் அமைச்சர் இவோன் பெனெடிக்கிற்கும், துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனுக்கும் மனதார நன்றி தெரிவித்துக் கொள்வதாக குமரேசன் குறிப்பிட்டார்.