கோலாலம்பூர், ஜூன் 26 – மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற Sumbangsih கிண்ண காற்பந்து போட்டியில் சிலாங்கூர் கலந்துகொள்ளத் தவறியதற்காக MFL எனப்படும் மலேசிய காற்பந்து லீக் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மலேசிய காற்பந்து சங்கமான FAM மின் தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமின் (Hamidin Mohd Amin ) மற்றும் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எடுத்த முடிவு ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah) தெரிவித்திருக்கிறார்.
மலேசிய காற்பந்து லீக் முடிவு குறித்து நான் மிகவும் சினம் அடைந்துள்ளேன். MFL முடிவு பொறுப்பற்ற , கருணையற்ற மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் இருந்தது. கொடுரமான நடவடிக்கை தொடர்பில் பரிவை வெளிப்படுத்தும் வகையில் மலேசிய காற்பந்து லீக் முடிவு பிரதிபலிக்கவில்லை என்றும் சிலாங்கூர் சுல்தான் சுட்டிக்காட்டினார்.
சிலாங்கூர் மற்றும் மலேசிய காற்பந்து விளையாட்டுத்துறைக்கு அடையாளமாக திகழ்ந்த பிரபல காற்பந்து நட்சத்திரமான பைசால் ஹலிம்மிற்கு ( Faisal Halim ) எதிராக மே 5ஆம்தேதி அவரது உயிருக்கு மிரட்டலை ஏற்படுத்தும் வகையில் கொடூரமாக எரி திரவம் (அசிட்) தாக்குதல் நடத்தப்பட்டது. அதே வாரத்தில் தொழில் ரீயியிலான பல காற்பந்து விளையாட்டாளர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் காற்பந்து குழுவின் விளையாட்டாளர்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இருந்ததால் sumbangsih கிண்ணத்தின் ஆட்டத்தை ஒத்திவைப்பதற்கு மனுச்செய்யும்படி சிலாங்கூர் காற்பந்து கிளப்பிற்கு தாம் அனுமதி வழங்கியதாக சுல்தான் ஷராபுடின் தெரிவித்தார்.
எனினும் ஆட்டத்தை ஒத்திவைப்பதற்கு MFL மறுத்துவிட்டதோடு அந்த ஆட்டத்தின் முடிவை எதிரணிக்கு சாதகமாக அறிவித்தது. காற்பந்து விளையாட்டு மலேசியர்களுக்கு விருப்பமான ஒன்று என்பதோடு மலேசியர்களை ஒன்றுபடுத்தக்கூடிய விளையாட்டு உணர்வை கொண்டதாகும். ஆனால் MFL லின் முடிவு வரம்பை மீறியிருப்பதோடு காற்பந்து விளையாட்டின் தோற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுல்தான் தெரிவித்தார்.