கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – மஸ்ஜிட் இந்தியாவில் இந்தியாவைச் சேர்ந்த மாது ஒருவர் நில அமிழ்வில் சிக்குண்டு காணாமல் போயிருக்கும் சம்பவம் குறித்து பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கவலைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை சந்திக்க ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான RSN ராயர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும், மேலவை உறுப்பினருமான செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் மற்றும் அதன் உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகையளித்தனர்.
பாதிக்கப்பட்டவரின் நிலை குறித்து கவலையை வெளிப்படுத்திய RSN ராயர், விரைவில் தொடர்ந்து நடைபெறும் தேடுதல் நடவடிக்கையால் அந்த மாது கண்டுபிடிக்கப்படுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தைக் காயப்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களிலும் எந்த எதிர்மறையான கருத்தையும் வெளியிட வேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட மாதுவிற்காக அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறும் டாக்டர் லிங்கேஸ்வரன் கேட்டு கொண்டார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதி உதவி தேவைப்பட்டால், உதவுவதற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.