கோலாலம்பூர், ஆகஸ்ட்-29 – பிரபல மலாய் மாந்திரீகர் என தன்னை அழைத்துக் கொள்ளும் ‘ராஜா போமோ’ Ibrahim Mat Zin-னுக்கு கூட்டரசு பிரதேச முஃப்தி அலுவலகம் சம்மன் அனுப்பவுள்ளது.
தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் இந்தியாவைச் சேர்ந்த குடும்ப மாது நில அமிழ்வில் சிக்கிக் காணாமல் போன இடத்தில், நேற்று மாந்திரீக சடங்குகளைச் செய்ததன் பேரில் அவரிடம் விளக்கம் பெறப்படவிருக்கின்றது.
ராஜா போமோவின் அச்செயல், மக்கள் மத்தியில் குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
அதோடு, இஸ்லாத்தைப் பற்றி தவறான எண்ணைத்தை உருவாக்கி விடும் சாத்தியத்தையும் கொண்டிருப்பதாக, இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் நாயிம் மொக்தார் (Naím Mokhtar) தெரிவித்தார்.
ஏற்கனவே அது போன்ற மாந்திரீக சடங்குகள் சர்ச்சையில் சிக்கியவர் என்பதால், 1997 ஷாரியா குற்ற நடைமுறைச் சட்டத்தின் கீழ் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மஸ்ஜித் இந்தியா சம்பவத்திலும் தேவையில்லாமல் அவர் பிரவேசித்திருப்பதாகக் அமைச்சர் சொன்னார்.
ராஜா போமோ Ibrahim Mat Zain நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீரை தெளித்து ஏதோ சாங்கியத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் வைரலாகின.
பேராக்கில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றின் அடியிலிருந்து கொண்டு வந்த பிரத்தியேக தண்ணீர் என அதனை அவர் கூறிக் கொண்டார்.
அவரின் அந்நடவடிக்கை பெரும்பாலான நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்தது.
2014-ல் MH370 விமானம் காணாமல் போன சமயத்தில் KLIA-வில் இளநீர் வைத்துக் கொண்டு ‘கூத்தில்’ ஈடுபட்டவர் தான் இந்த ‘ராஜா போமோ’ என்பது குறிப்பிடத்தக்கது.