கோலாலம்பூர், ஜூன் 24 – காலங்களைக் கடந்த கீதங்களாக இன்றைக்கும் வாழ்பவர் கவியரசு கண்ணதாசன்.
இயல்பான வாழ்வியல் செறிவுமிக்க வரிகளைப் பாடல்களாக்கி, சமூகத்தின் கடைக்கோடி காதுகள் வரை ரீங்கரித்தவரின் 49ஆவது ஆண்டு விழா நேற்று கோலாலம்பூரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நல்ல தமிழை கேட்க விரும்புவதால்தான் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த கண்ணதாசன் விழாவில் பங்கேற்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என கூறிய மஇகாவின் துணைத் தலைவரும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், கண்ணதாசனின் போற்றுவதற்கான காரணத்தையும் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இவ்விழாவில், இதுவரையில் 246 கலைப்படைப்பாளர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளார். அதுபோல இந்த ஆண்டும் நடைபெற்ற இந்தச் சிறப்பு அங்கத்தில் ஐந்து பேர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர் என்றார் அதன் செயலாளர் கரு. கார்த்திக்.
கண்ணதாசனின் ஆற்றலையும் அவருடைய தமிழையும் இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்த இவ்விழாவில் பங்கேற்ற இளையோரான OM PERASATH வணக்கம் மலேசியாவிடம் கருத்து பகிர்ந்தார்.
ஏறக்குறைய 500 பேர் கலந்து கொண்ட இவ்விழாவினை மெருகூட்டும் வகையில் தமிழகத்துப் பேச்சாளர்களான முனைவர் ந.விஜயசுந்தரி ‘பாட்டுடைத் தலைவன்’ எனும் தலைப்பிலும், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா ‘ஊர் நெடுக என் பாடல்’ எனும் தலைப்பிலும், மலேசிய பேச்சாளரான டத்தோ மருத்துவர் வ.கதிரேசன் ‘கண்ணதாசன் பாடல்களில் சைவ சித்தாந்தம்’ எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.