கோலாலம்பூர், டிசம்பர்-2 – கோலாலம்பூர் மாநகரவாசிகள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரும் பொருட்டு, AI அதிநவீன தொழில்நுட்பத்தால் இயங்கும் 5,000 CCTV கேமராக்களை DBKL பொருத்துகிறது.
மாநகர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, முக்கிய இடங்களில் அவை பொருத்தப்படுகின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள், அடிக்கடி குற்றச்செயல்கள் நிகழும் பகுதிகள், பொதுப் பூங்காக்கள், River of Life போன்ற சுற்றுலா தலங்கள், கடைவீதிகள் உள்ளிட்டவை அவ்விடங்களாகும்.
24 மணி நேரங்களும் செயல்படும் இந்த AI CCTV கேமராக்கள், 200 மீட்டர் தூரம் வரையில், 360 பாகை பார்க்கும் திறனைக் கொண்டுள்ளன.
Fibre optic எனப்படும் ஒளியிழை வசதியும் இருப்பதால் உயர் தரமான படங்களையும் அவற்றால் பதிவுச் செய்ய முடியும்.
தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு பதிவுச் செய்யும் ஆற்றலையும் அவை கொண்டிருப்பது தேவைப்படும் போது விசாரணைகளுக்கு பெரிதும் உதவுமென நம்பப்படுகிறது.
இந்த அதிநவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம், ஆபத்து அவசர நேரங்களிலும், திடீர் வெள்ளம் மற்றும் பெரு வெள்ள காலத்தின் போதும், அதிகாரிகளுக்கு விரைந்து எச்சரிக்கை அனுப்ப முடியும் என, முகநூல் வாயிலாக DBKL தெரிவித்தது.