
புத்ராஜெயா, செப்டம்பர்-23,
RON95 பெட்ரோலுக்கான BUDI95 மானியத் திட்டத்தில் MyKad அடையாள அட்டைகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க, தேசிய பதிவுத்துறையான JPN மற்றும் நிதியமைச்சின் தரவுகளை அரசாங்கம் ஒருங்கிணைத்துள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் அதனைத் தெரிவித்தார்.
காணாமல் போன 100க்கும் மேற்பட்ட MyKad அட்டைகள் JPN கணினி முறையில் இரத்துச் செய்யப்பட்ட பிறகும், நிதியமைச்சின் SARA உதவித் திட்டத்தில் அதன் தரவுகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவ்வாறு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சின் தரவுத் தளம் real-time எனும் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படாததே அப்பிரச்னைக்குக் காரணம் என்றார் அவர்.
இந்த ஒருங்கிணைப்பின் மூலம், இனி JPN-னில் இரத்துச் செய்யப்பட்ட எந்த MyKad-டும் உடனடியாக நிதியமைச்சின் கணினி முறையிலும் செயலிழக்கச் செய்யப்படும்.
இதன் மூலம் SARA உதவி அல்லது BUDI95 மானியங்களுக்கான தவறான பயன்பாடு முற்றிலும் தடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.