
சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 10 – தற்காப்புக் கலைப் பயிற்சியாளரான 44 வயதுடைய மாஸ்டர் கண்ணா , என்பவரின் பயிற்சி மையம் மற்றும் Toyota Alphard கார் தீவைத்து எரிக்கப்பட்டதில் சுமார் 180,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 31ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் Putra Heights-இல் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் பயிற்சி மையத்துக்குள் புகுந்த இருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், சம்பவம் CCTV-யில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பும் தனது காரில் GPS கருவி பொருத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளின் இன்ஜினுக்குள் உப்பு போட்டு அது சேதப்படுத்தப்பட்டதாகவும் மாஸ்டர் கண்ணா கூறினார்.
மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் தொடர்பாக AI மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி காணொளிகள் TikTok-இல் பரப்பப்பட்டதாகவும், அவை மாணவர்களின் பெற்றோருக்கும் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) தெரிவித்தார்.



