
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-10 – கோலாலாம்பூர், NPE நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சிறிய இந்து ஆலயமொன்று தொடர்பான விவகாரம் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.
கோயில் நிர்வாகம், ஆலயத்தை அங்கிருந்து அகற்றி வேறிடத்துக்கு மாறிச் செல்ல ஒப்புக் கொண்டதை அடுத்து, இந்தச் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ N. சிவகுமார் கூறினார்.
இது ஒரு வரவேற்கத்தக்க ஒன்றென வருணித்த அவர், இதுபோன்ற பிரச்னைகளில் சுமூகத் தீர்வுகளை நாடிச் செல்வதே நலம் என்றார்.
அதே சமயம், இந்த கோயில் இத்தனைக் காலமாக செயல்பட்டு வருவது ஊராட்சி மன்றங்களுக்குத் தெரியாமல் போனதேன் என்ற கேள்வியையும் சிவகுமார் முன்வைத்தார்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த அளவுக்கு விவகாரம் செல்வதைத் தடுத்திருக்கலாமே என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட கோயிலின் நில உரிமை மற்றும் கட்டட அனுமதி நிலை குறித்து அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளிக்குமாறு லெம்பா பந்தாய் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் முன்னதாக கவனத்தை ஈர்த்தது.
அனுமதி குறித்த விவரங்களைப் பகிரங்கப்படுத்துமாறும் அது கோரியிருந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்டத் தரப்புகளின் சந்திப்புகளுக்குப் பிறகு இவ்விவகாரம் சுமூகத் தீர்வை எட்டியுள்ளது.
இவ்வேளையில், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோயில்களை சட்டவிரோத கோயில்கள் என முத்திரைக் குத்தும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் சிவகுமார் வலியுறுத்தினார்.
ஒரு காலத்தில் Pendatang Haram அதாவது சட்டவிரோதக் குடியேறிகள் என அழைக்கப்பட்ட வெளிநாட்டவர்களை, இப்போது Pendatang Asing Tanpa Izin அதாவது அனுமதியில்லாமல் குடியேறிய வெளிநாட்டவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
ஆனால், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கோயில்களை மட்டும் ஏன் சட்டவிரோதக் கோயில்கள் (Kuil Haram) என இன்னமும் அழைக்கிறார்கள் என சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
இந்த வார்த்தைகளை மாற்றும் முயற்சிகளை நமது தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்விவகாரத்தில் ‘சட்ட விரோதக் கோயில்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியற்காக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமே பகிரங்க மன்னிப்புக் கேட்டு விட்டார்; அது வரவேற்கத் தக்கது, ஆனால் அப்படியொரு வார்த்தைப் பயன்பாட்டை அதிகாரிகள் மத்தியில் பிரதமர் தடைச் செய்தால் இன்னும் நல்லதாக அமையும் என சிவகுமார் சொன்னார்.
இன்று NPE நெடுஞ்சாலை ஓரமாக உள்ள கோயில் தொடர்பான கலந்துரையாடலுக்குப்பின் , கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான சிவகுமார் இவ்விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.



