மிருக வேட்டையின் போது நண்பர் தவறுதலாக சுட்டுக் கொலை – சம்பவத்தை மறைக்க சடலத்தை செமாங்கோலில் கைவிட்ட சாதுர்யம்

பாகான் செராய், அக்டோபர்-1,
பேராக், பாகான் செராயில் 43 வயது ஆடவரின் சடலம் செமாங்கோல், கம்போங் செலாமாட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது முதுகில் 3 துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருந்தன.
விசாரணையில் இறங்கிய போலீஸார், கொலைக்குப் பின்னணியில் திரைப்படங்களில் நாம் பார்த்துப் பழகிப் போன காட்சிகளைப் போலவே நிகழ்வுகள் அரங்கேறியிருப்பதை கண்டறிந்தனர்.
அதாவது, செப்டம்பர் 28-ஆம் தேதியன்று சிலாங்கூர் பத்து கேவ்ஸில் வேட்டைக்கு சென்றபோது, இறந்துபோனவரை, அவரின் நண்பர் விலங்காக நினைத்து துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
உண்மைச் சம்பவத்தை மறைக்க, அவரது நண்பர்கள் 3 வாகனங்களில் சடலத்தை கொண்டு வந்து, செமாங்கோலில் உள்ள ஒரு புழுதி சாலையில் கைவிட்டுச் சென்றனர்.
இதையடுத்து 32 முதல் 36 வயதுடைய மூன்று பேரை போலீஸார் கைதுச் செய்தனர்; இறந்துபோனவரின் உறவினர் ஒருவரும் அவர்களில் அடங்குவார்.
அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், வீட்டில் தயாரித்த துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் கைப்பேசிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
மூவரும் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், மேலும், ஒரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.