கோலாலம்பூர், ஆகஸ்ட்-12 – விரைவிலேயே அமைச்சரவை மாற்றம் நிகழுமெனக் கூறப்படுவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
பிரதமரான தமக்கே அது குறித்து தெரியாத போது, யார் அந்த புரளியைக் கிளப்பி விட்டதென அன்வார் நகைச்சுவையாகக் கேட்டார்.
அமைச்சரவை மாற்றத்தில், ஒரு மாநிலத்தின் மந்திரி பெசாரும் மத்திய அமைச்சராகவிருப்பதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அடுத்தப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம் என பிரதமர் சுருக்கமாகச் சொன்னார்.
டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்க அமைச்சரவை கடந்தாண்டு டிசம்பரில் முதன் முறையாக மாற்றியமைக்கப்பட்டது.
அப்போதைய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் நீக்கப்பட்டது உள்ளிட்ட சிறிய அளவிலான மாற்றங்களை பிரதமர் அறிவித்திருந்தார்.
அது நடந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், மீண்டும் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவிருப்பதாக இணையச் செய்தி ஊடகமொன்று முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிலும், பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் வேறு அமைச்சுக்கு மாற்றப்படலாம் அல்லது ஒரேடியாக நீக்கப்படலாமென அக்கட்சியின் நெருங்கிய வட்டாரமொன்றை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியிருந்தது.