
கோலாலம்பூர், மார்ச்-28- 2024-ல் 8.1 விழுக்காடாக இருந்த 65 வயதுக்கு மேற்பட்ட மலேசிய மக்கள்தொகை, 2040-ல் 14.5 விழுக்காட்டை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மலேசியா ‘வயோதிக’ நாடாக மாறி வருகிறது.
அவர்களைப் பராமரிக்கும் ஆற்றலும் வசதியும் மிகவும் அத்தியாவசியமாகும்.
பலருக்குக் கேட்பதற்கு இது சாதாரணமாக இருந்தாலும், உண்மையில் இது முக்கியப் பிரச்னையாகும்; அதனால் தான் மேலவையில் அது குறித்து கேள்வியெழுப்பியதாக செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாசலம் கூறினார்.
ஆனால் கிடைக்கப் பெற்ற பதில்கள் அதிர்ச்சியளிப்பதோடு பெரும் கவலையை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார்.
நாடு முழுவதும் முதியோர்களுக்கென வெறும் 67 சிகிச்சை நிபுணர்களே உள்ளனர்.
அவர்களில் 37 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளிலும், 14 பேர் பல்கலைக்கழக மருத்துவமனைகளிலும், 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றுகின்றனர்.
இதன் மூலம் முதியோர் சிகிச்சை நிபுணர்களின் எண்ணிக்கை, 65 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு 10,000 பேருக்கும் 0.25 என்ற வீதத்திலேயே உள்ளது.
ஒவ்வொரு 10,000 பேருக்கும் 1 மருத்துவர் என்ற அரசாங்கத்தின் இலக்கோடு ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவாகும் என லிங்கேஷ் சுட்டிக் காட்டினார்.
2030-ஆம் ஆண்டில் மலேசிய மொத்த மக்கள்தொகை 36.6 மில்லியன் பேரை எட்டுமென்ற நிலையில், இந்த 5 ஆண்டுகளில் நமக்குக் குறைந்தது 549 முதியோர் சிகிச்சை நிபுணர்கள் தேவையாகும்.
ஆனால் ஆண்டுக்கு சராசரியாக வெறும் 8 நிபுணர்களை மட்டுமே உருவாக்கும் நம்மால் அவ்விலக்கை அடைவதென்பது சாத்தியமற்றது.
அதே சமயம், பினாங்கில் நாட்பட்ட முதியோர் நோயாளிகளுக்கான கட்டில்களின் எண்ணிக்கை 25 மட்டுமே.
அவ்வெண்ணிக்கையானது, 65 வயதுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு 10,000 பேருக்கும் 0.17 என்ற வீதம் மட்டுமே.
சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்விகிதாச்சாரம் முறையே 2.18, 2.38 என்ற உயரிய அளவில் உள்ளது.
இது நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் பெரிய இடைவெளியாகும்.
எனவே இப்பிரச்னையின் கடுமை உணர்ந்து சுகாதார அமைச்சோ உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.
தவறினால் பெரும் பிரச்னையை நாம் சந்திக்க நேரிடுமென லிங்கேஷ் நினைவுறுத்தினார்