
கோழிக்கோடு, செப்டம்பர்-15,ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் நேஷனலை வெளியேற்றுங்கள் அல்லது முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்துங்கள் என விடுக்கப்பட்ட சவால், அம்னோவின் சொந்தக் கருத்து மட்டுமே என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான தமது அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு கோழிக்கோட்டில் மலேசிய ஊடகங்களிடம் பேசிய அவர், ஒவ்வொரு குடும்பத்திலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான் என்றும், அரசாங்கத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி சவால் விடுத்திருந்த போதிலும், தற்போதைய ஆட்சி முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாரிசான் கூட்டணி ஆதரவளிக்கும் என பின்னர் தெளிவுப்படுத்தினார்.
இந்நிலையில், அம்னோ பொதுப் பேரவையில் கூறப்பட்ட கருத்துகள் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் என்றும், தமக்கு அம்னோவுடன் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் பிரதமர் அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.கூட்டணி கட்சிகள் மத்தியில் இது வழக்கமான ஒன்றுதான் என்றார் அவர்.



