
கோழிக்கோடு (கேரளம்), செப்டம்பர்-15,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்பு விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்ட விவகாரம், மாமன்னரின் முழுமையான அதிகாரத்திற்கு உட்பட்டது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவ்வாரியத்தில், சட்டம் மற்றும் தேசிய சட்டத் துறைத் தலைவரின் ஆலோசனையின்படியே தமது பங்கு அமைவதாக அவர் கூறினார்.
இந்தியாவுக்கான அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு கேரளம், கோழிக்கோட்டில் மலேசிய ஊடகங்களிடம் பேசிய அன்வார், கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரிய கூட்டத்தில் மாமன்னர் உரிய காரணங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.
ஊழல் வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும், Tabung Haji மற்றும் Felda விவகாரங்களில் கடுமையான போக்குத் தேவைப்படுவதை மாமன்னர் வலியுறுத்தியுள்ளதையும் அன்வார் இவ்வேளையில் சுட்டிக் காட்டினார்.
மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் நஜீப்பின் விண்ணப்பம் ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தை அரசாங்கம் விளக்கம் வேண்டும் என, பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் முன்னதாக வலியுறுத்தியிருந்தார்.
வாரிய உறுப்பினர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலோ ஒழிய அது ஒத்தி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என தாக்கியுடின் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அன்வார், வாரியத்தின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் பாஸ் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதாகச் சாடினார்.
SRC மற்றும் 1MDB வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள 72 வயதான நஜிப்பின் விவகாரம் அரசியலமைப்பின் படியே கையாளப்படுவதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.



