
புத்ராஜெயா, அக்டோபர்-14,
300 லிட்டர் போதாது என்ற முழுநேர e-hailing ஓட்டுநர்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான RON95 பெட்ரோல் மானிய அளவு மாதத்திற்கு 600 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்புதிய ஒதுக்கீட்டால், 53,900க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பலனடைவர் என தரை பொது போக்குவரத்து ஆணையமான APAD கூறியது.
அதே சமயம், சரவாக் மாநிலத்தில் பதிவுச் செய்யப்பட்ட தனியார் படகு பயனர்களும் இப்போது மானியம் பெறுநர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து 1,400க்கும் மேற்பட்ட சரவாக் படகு உரிமையாளர்கள் இப்போது இதன் கீழ் வருகிறார்கள்.
இதற்கு முன், சபா மற்றும் மீன்வளத் துறையின் படகு பயனர்களுக்கு அது விரிவுப்படுத்தப்பட்டது.
தவிர, புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 11,400 பேரும் சேர்க்கப்பட்டதன் மூலம், 16 மில்லியன் மலேசியர்கள் தற்போது BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்தின் கீழ் பலனடைகின்றனர்.
செப்டம்பர் கடைசியில் அறிமுகப்படுத்தப்பட்ட BUDI95 திட்டம், தகுதியுள்ள மலேசியர்கள் மாதத்திற்கு 300 லிட்டர் வரை RON95 பெட்ரோலை RM1.99 விலையில் வாங்க அனுமதிக்கிறது.
இந்த மானியத் திட்டம் துல்லியமானது, இலக்கிடப்பட்டது மற்றும் மக்களுக்கு நேரடி நன்மை அளிப்பதாகும் என நிதியமைச்சு கூறியுள்ளது.