கோலாலம்பூர், ஆகஸ்ட்-20,
கிளந்தான் நெங்கிரி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது தான் ஸ்ரீ முஹிடின் யாசின் (Tan Sri Muhyiddin Yassin) பேசிய வீடியோவை எடிட் செய்து, தவறான அர்த்தத்தில் வெளியிட்டதாதக் கூறி, இணைய ஊடகமொன்றின் மீது பெர்சாத்து கட்சியின் இளைஞர் பிரிவு போலீசீல் புகார் செய்துள்ளது.
வீடியோவைத் தவறான முறையில் எடிட் செய்து, பொது மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு, அந்த முன்னாள் பிரதமரை அவதூறு செய்யும் நோக்கத்திலும் சம்பந்தப்பட்ட ஊடகம் செயல்பட்டிருப்பதாக, போலீஸ் புகாரில் கூறப்பட்டது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களுக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்குமிடையில் நெருக்கடியை ஏற்படுத்தும் தீயச் செயல் அதுவென, பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் கமால் (Wan Ahmad Fahysal Wan Ahmad Kamal) குறிப்பிட்டார்.
முழு பேச்சிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டுமே வெட்டி எடுத்து, தவறான அர்த்தத்தைக் கற்பிக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் வான் ஃபைசால் கூறிக் கொண்டார்.
பஹாங் சுல்தானைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதாக் கூறி முஹிடின் மீது பஹாங் அரண்மனை உட்பட இதுவரை 20-க்கும் மேற்பட்ட தரப்புகள் போலீசில் புகார் செய்துள்ளன.
அது குறித்து இன்று போலீசில் முஹிடின் வாக்குமூலம் அளிக்கவிருந்த நிலையில், அது நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.