மூவார், ஜூன்-18 – ஜொகூர், மூவாரில் உள்ள முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தந்தையின் கல்லறையில், பில்லி சூன்யம் வைக்கப்பட்டது போன்ற ஏராளமான சிறியப் பொட்டலங்கள் நூலால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
ஹஜ் பெருநாளன்று காலையில் கல்லறைக்குச் சென்ற போது, அவரின் குடும்பத்தினர் அப்பொட்டலங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நல்ல நாளில் இது போன்ற செயல்கள் தங்களை மிகவும் வருத்தமடையச் செய்வதாக அவர்கள் ஏமாற்றத்துடன் கூறினர்.
எனினும் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.
மூவார், பக்ரி பத்து 1 இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் காணொலி முன்னதாக டிக் டோக்கில் வைரலானது.
குடும்ப உறுப்பினர்கள் கல்லறையில் இருந்து அப்பொட்டலங்களை எடுக்கும் 27 வினாடி அக்காணொலியை ஏராளமானோர் பார்த்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவுச் செய்யப்பட்டன.
அவர்களில் பலர், அப்பொட்டலங்கள் பார்ப்பதற்கு சூன்யம் வைக்கப்பட்டவை போல் இருப்பதால், தொடாதீர்கள் என கூறினர்.
அப்படித் தொட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதாவது கெடுதல் நேரலாம் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
முஹிடினின் தந்தை மறைந்த Tuan Guru Mohamad Yassin Muhammad, மூவார் வட்டாரத்தில் இன்றளவும் பெரிதும் மதிக்கப்படுபவராவார்.